திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக வினவிற்கு நன்றி
தென்பெண்ணையை தடுக்கும் கர்நாடகாவின் அடாவடித்தனம்!
காவிரியை தொடர்ந்து தற்போது தென்பெண்ணை ஆற்று நீரையும் உறிஞ்சுகிறது. மின்சாரம் இல்லையென்றாலும்கூட ஜெனரேட்டரை பொருத்தி 24 மணிநேரமும் வக்கிரமாக உறிஞ்சிவருகிறது கர்நாடக இனவெறி பி.ஜெ.பி அரசு.
தென்பெண்ணை ஆற்றின் தண்ணீரை தடுக்கின்ற கர்நாடக அரசின் அடாவடித்தனத்தை முறியடிப்போம்!
என்ற முழக்கத்தின் அடிப்படையில் ஓசூர் தாலுக்கா பாகலூரில் உள்ள சர்க்கிள் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 01.04.2013 மாலை 5 மணியளவில் இங்கு செயல்படும் புரட்சிகர அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மற்றும் அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக நடத்தப்பட்டது. இவ்வமைப்பின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள்சின்னசாமி, சங்கர், நாகராஜ், மற்றும் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
விண்ணதிர முழக்கங்கள் எழுப்பி பகுதிவாழ் பொதுமக்களை இந்த ஆர்ப்பாட்டத்தை கவனிக்க செய்தது பொருத்தமாக இருந்தது. இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் சூளகிரி பகுதி பொறுப்பாளர்தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினர், திரளான மக்கள் கூடிநின்று ஆதரவளித்து நன்கொடையும் தந்துச் சென்றனர்.
ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதற்குமுன் பாகலூர் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் அச்சிட்டு ஆலைவாயில்கள், கடைவீதிகள், குடியிருப்புப் பகுதிகள், அரசுமருத்துவமனை, போன்று மக்கள் திரளாக கூடும் இடங்களிலெல்லாம் கூடி தெருமுனைப்பிரச்சாரம் செய்து விநியோகிக்கப்பட்டுள்ளன. பரவலான மக்கள் ஆதரவைப் பெற்று அவர்களிடம் விவாத்தை தூண்டிய அந்த துண்டறிக்கையில் வெளியிடப்பட்ட செய்திகளை அப்படியே இங்கே தருகிறோம்.
நன்றி!
துண்டறிக்கை
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம் இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும், இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போதைய தலைமுறைக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் தண்ணீரின் மீது முழு உரிமை உண்டு. கர்நாடகா மாநிலத்தில் சிக்கப்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் உற்பத்தியாகி ஒசகோட்டம், ஒரத்தூர் வழியாக வரும் “தட்சிணப் பிணாகினி ” ஓடை, கொடியாளம் பகுதியில் தமிழகத்தை தொட்டு தென்பெண்ணை ஆறாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது.
இந்த தென்பெண்ணை ஆறு கொடியாளம் தடுப்பாணையைத் தாண்டி ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, பாடூர் ஏரிகளை நிரப்பி, தருமபுரியின் சில பகுதிகளை நனைத்து திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணையில் வழிந்து விழுப்புரம் வழியாகச் சென்று கடலூரில் கடலில் சென்று கலக்கிறது. வழிநெடுக 2000-த்திற்கும் அதிகமான ஏரிகளை நிரப்பி விவசாயத்திற்கு பாசன வசதியை உருவாக்கியுள்ளது. இதனால் பல லட்சம் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் மட்டும் 3 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் நெல், தென்னை,கரும்பு, வாழை, காய்கறிகள், பூ என பயிரிட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். மேலும் கெலவரப்பள்ளி அணையில் தண்ணீரை சுத்திகரித்து குடி தண்ணீராக பெருமளவு ஒசூர் மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் ஓசூரிலுள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் இந்த நீராதாரத்தை நம்பித்தான் செயல்பட்டு வருகின்றன.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கு வரும் ஒட்டுமொத்த தண்ணீரையும் சதித்தனமாக கர்நாடகா அரசு ஒரத்தூர் ஏரியில் மிகப் பெரிய அளவில் ஒரு பம்ப்பிங் ஸ்டேசன் அமைத்து அதன் மூலம் முழுத் தண்ணீரையும் ஒசகோட்டா ஏரிக்கே திருப்பி அங்கிருந்து கோலார் தங்கவயல், மாலூர் பகுதிகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கும், குண்டூர், மானியங்கிரி, சிக்கத்திருப்பதி ஏரிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டுச் செல்ல 54- கோடி நிதி ஒதுக்கீடும் செய்து அடிக்கல் நாட்டி இப்போது அதனை கடந்த மார்ச் 11ம்தேதி முதல் தீவிரமாக அடாவடித்தனமாக அமுல்படுத்தியும் வருகிறது. ஏற்கனவே தென்பெண்ணையாற்றில் பெங்களூருவின் கழிவுநீர் முழுவதும் கலக்கப்படுகிறது. அவ்வாறு கலக்கப்படுவதால் ஆற்று நீர் அணைத்தும் நாற்றமெடுத்து நாறுகிறது. இந்நிலையில் கர்நாடக அரசின் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால்…பட்டுவேட்டிக்கு கனவு கண்டிருந்தபோதே மிஞ்சியிருந்த கோவணமும் களவாய்போன கதையாக தென்பெண்ணையாறு மற்றொரு கூவமாகி கழிவுநீர் மட்டும் பாயும் சாக்கடையாக மாறிவிடும் அபாயத்தில் உள்ளது.
ஏற்கனவே, காவிரியில் தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டிய தண்ணீரை மறுத்து அடாவடி செய்த கர்நாடக அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை கூட காலில் போட்டு மிதித்துவிட்டு காவிரி டெல்டா விவசாயிகளை பசியாலும், பட்டினியாலும் வதைத்து நாடோடிகளாக்கியது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியைக் கைப்பற்ற பலமுறை இனவெறியைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தியது இந்துமதவெறி பாரதிய ஜனதா கட்சியின் அரசு. இப்போது தென்பெண்ணை ஆற்றை தடுத்து அரைகுறை விவசாயத்தையும் ஒழித்துக்கட்டி, தமிழகத்தை முழு பாலைவனமாக மாற்ற அராஜகமாக களமிறங்கியுள்ளது கர்நாடக இனவெறி பி.ஜே.பி அரசு. தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் தமிழகத்துக்கு வரும் தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஓசூரிலுள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென குறைந்துவருகிறது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஓசூர் நகராட்சி குடிநீர் தேவைக்கு வழங்கப்படும் தண்ணீர் தற்போது 5 லட்சம் லிட்டரும், சிப்காட் தொழிற்பேட்டைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீராகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.
1892 ம் ஆண்டு மெட்ராஸ்-மைசூர் மாகாணங்களின் ஒப்பந்தத்தில் இரு மாநிலங்களின் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு புதிய நீர்த்தேக்கம் கட்டவோ, பாசனத் திட்டத்தை செயல்படுத்தவோ முயற்சி செய்தால் அதுகுறித்து தமிழக அரசிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதையும் மதிக்காமல் கர்நாடக அரசு அடாவடியாக இந்த தண்ணீர் உறிஞ்சும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, வாழை, ராகி, உள்ளிட்ட பயிர்கள் மற்றும் முட்டைகோஸ், காலிஃபிளவர், கேரட், குடை மிளகாய், ரோஜா உள்ளிட்ட காய்கறிகள், மலர்செடிகள் அனைத்தும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
காவிரியை தொடர்ந்து தற்போது தென்பெண்ணை ஆற்று நீரையும் உறிஞ்சுகிறது. மின்சாரம் இல்லையென்றாலும்கூட ஜெனரேட்டரை பொருத்தி 24 மணிநேரமும் வக்கிரமாக உறிஞ்சிவருகிறது கர்நாடக இனவெறி பி.ஜெ.பி அரசு.
கர்நாடக அரசின் இனவெறி நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு துணை போகிறது. தி.மு.க., அ.தி.மு.க போன்ற தமிழக ஓட்டுக் கட்சிகள் கர்நாடக அரசின் இந்த இனவெறி நடவடிக்கையை எதிர்க்கவோ, தடுத்து நிறுத்தவோ செய்யாமல் அறிக்கை விடுத்து நாடகமாடிவருகின்றனர்.
பாதிக்கப்பட இருப்பது தமிழக விவசாயிகளும், தமிழக உழைக்கும் மக்களும்தான்! ஆகையால், தமிழக விவசாயிகளையும், தமிழக உழைக்கும் மக்களையும் ஓரணியில் திரட்டி, மத்திய-மாநில அரசுகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். அந்த வகையிலான போராட்டம்தான் தமிழகத்தின் உரிமையை தற்காத்துக் கொள்ள உதவும்! அதற்கான மக்கள் எழுச்சியை உருவாக்க ஓட்டுக்கட்சிகளை புறக்கணித்து நக்சல்பாரிகளின் தலைமையின்கீழ் ஓரணியில் மக்கள் திரட்டப்படவேண்டும்!
முழக்கங்கள்:
தமிழக அரசே!
தென்பெண்ணை ஆற்றை பாதுகாத்திடு!
தண்ணீரை தனியார்மயமாக்கும் தேசிய நீர்கொள்கை 2012 ஒப்பந்தத்தை திரும்பப் பெறு!
தென்பெண்ணை ஆற்றை பாதுகாத்திடு!
தண்ணீரை தனியார்மயமாக்கும் தேசிய நீர்கொள்கை 2012 ஒப்பந்தத்தை திரும்பப் பெறு!
உழைக்கும் மக்களே!
தென்பெண்ணை ஆற்றில் தமிழகத்தின் நீர்ப்பாசன உரிமையை மீட்டெடுப்போம்!
விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதுகாக்க வீதியில் இறங்கிப் போராடுவோம்!
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தனியார்மய- தாராளமய- உலகமயம் என்கின்ற மறுகாலனியாக்க கொள்கைகளை முறியடிப்போம்!
தென்பெண்ணை ஆற்றில் தமிழகத்தின் நீர்ப்பாசன உரிமையை மீட்டெடுப்போம்!
விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதுகாக்க வீதியில் இறங்கிப் போராடுவோம்!
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தனியார்மய- தாராளமய- உலகமயம் என்கின்ற மறுகாலனியாக்க கொள்கைகளை முறியடிப்போம்!
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தமிழ்நாடு.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தமிழ்நாடு.
தொடர்புக்கு: தோழர். ரவிச்சந்திரன், சூடாபுரம் – கைபேசி எண்: 8883092572.
தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்.
இது இந்த தளத்தில் இருந்து பகிர்ந்துகொள்ளப்பட்டது..
http://www.vinavu.com/2013/04/05/thenpennai-water-blocked/#comment-82188
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக