புதன், 19 ஆகஸ்ட், 2020

அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மத்திய அரசு.

இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உள்ள வளாகத்தில் 50 அல்லது 100 படுக்கை வசதிக்கொண்ட கட்டிடத்தை தனியாருக்கு 30 வருடங்களுக்கு கொடுக்க வழிவகை செய்யும் ஒரு ஒப்பந்தத்தை அனைத்து மாநில அரசுக்கும் மத்திய நிதி ஆயோக் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனுப்பியிருக்கிறது.


இதன் மூலம் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கொண்டு இருக்கும் அரசு மருத்துவமனைகளையே இல்லாமல் செய்யும் வேலையை மத்திய அரசு செய்ய துணிந்திருக்கிறது. ஏற்கனவே 2012-இல் குஜராத் முதல்வராக மோடி இருந்த போது புஜ் அரசு மருத்துவமனையை அதானி குழுமத்தின் மருத்துவ கல்லூரிக்காக 99 வருடத்திற்கு குத்தகைக்கு விட்டவர்தான் இப்போது நாட்டிலுள்ள ஒட்டுமொத்த மாவட்ட மருத்துவமனைகளையும் தனியாருக்கு கொடுக்க முன்வருகிறார்.


ஏற்கனவே 'நீட்' எனும் சட்டத்தினால் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்ட மோடி அரசு, இப்போது இந்த புதிய ஒப்பந்தத்தால் அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு கொடுக்க வேலை செய்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு இரண்டு வார காலத்திற்குள் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்திருக்கிறார்.


இந்த ஒப்பந்தத்தை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும். அதுபோலவே எல்லா மாநிலங்களும் இதனை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதனால் வரக்கூடிய விளைவுகள் இந்திய சமூகத்தில் மிக மோசமானதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக