 திருவண்ணாமலையிலிருந்து சேலம் செல்லும் சாலையிலுள்ள செங்கம் சென்று அங்கிருந்து ஒரு கிராமம்(பெயர் மறந்துவிட்டது. தென்மாதிமங்கலம் என்று ஞாபகம்...) சென்று அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் காட்டு வழிதனில் நடந்து சென்று பார்த்தால் தூரத்தே உயரமாக நிமிர்ந்து சூழ்ந்திருக்கும் பல மலைகளுக்கு நடுவே தனித்துக் காட்சி தருவது பர்வதமலை. இம்மலை பற்றி என் நாற்பது வயது வரை கேள்விப்பட்டதே இல்லை.அப்படியே கேள்விப்பட்டிருந்தாலும் அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுத்திருக்கமாட்டேன் என்பது வேறுவிஷயம். திருச்சியில் தொழில்புரிந்தும் வசித்தும் வந்த எனக்கு, தெருவில் எதிர்வீட்டில் குடியிருந்த ஒரு குடும்பத்தோடு நட்பு நேரிட்டது. ஒரு பெரியவர், அவரின் மனைவி, நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் கொண்டு பெரிய குடும்பம்.படிப்பறிவு என்பது குடும்பத்தினர் அனைவருக்குமே உயர்நிலைப் பள்ளிவரைதான். ஆனால் தொழில் சம்பாத்தியம் என்பதில் எந்தக் குறைவுமில்லை. ஆளாளுக்கு சொந்தத்தொழில்தான். அக்குடும்பத்து மகன்களில் மூன்றாமவர் என்னிடம் நெருக்கமானார். வயது இருபத்தெட்டு இருக்கும். ஓவியர் மாருதி வரைந்த இளைஞன்போன்று முகத்தோற்றமும், உடற்கட்டும் முதலில் என்னைக் கவரக் காரணமாயிருந்தன. கூர்ந்த பார்வையும், சுருக்கமான பேச்சும் அடுத்து என்னைக் கவர்ந்தன. அனுபவம் தெறிக்கும் ஆன்மீகமும், தத்துவார்த்தமான பேச்சுக்களும் மேலும் கவர்ந்தன. தமிழக மக்களில் பெரும்பாலோர் கார்த்திகை மாதத்தில் சுவாமி ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருக்கத் தொடங்குவார்கள். ஆனால் இந்த நண்பரோ மாதாமாதம் விரதமிருந்து அமாவாசையன்று ஏதோ ஒரு கோயிலுக்குச் செல்வதாகச் சொல்வார்.நம்குடும்பப்பெண்கள் வாரவாரம் மாதாமாதம் என எத்தனையோ விரதமிருப்பர். இவர் அப்படியுமில்லை. வித்தியாசமாய் இருக்கிறதே என இவரிடம் விசாரித்தபோதுதான் ‘பர்வதமலை’ பற்றி விளக்கினார்.மாதாமாதம் விரதமிருந்து அமாவாசையன்று செல்வது இந்த மலைக்குத்தான். மக்களிடம் உள்ள ‘கடவுள்’ வழிபாட்டுக்கும் இவரிடம் நான் கண்ட இறைவழிபாட்டுக்கும் உள்ள வித்தியாசமே என்னை இவரிடத்தில் நேசம் கொள்ள வைத்தது. இறை என்பது நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் பெருவெளி. அந்த அகண்டத்தின் சுருக்கமே அணு. அணுவில் தொடங்கி அகண்டமாய் விரியும் பேரியக்கமே நாம் காணும் இந்த வாழ்க்கை. தோற்றமும் அழிவும் நம் கையில் இல்லை. படைத்தலின் நோக்கம் அறியமுடியாததொன்று. நம் சிற்றறிவுக் கெட்டியவரை ‘உண்மை’ உணர்ந்து கிடைத்த வாழ்வை சிறப்பாக்கிக்கொள்ளும் தேவை மனித உயிருக்கு இருக்கிறது. வாழ்வென்பது-அமைதியைத் தேடி அலையும் மனிதனுக்கு-ஓயாத போராட்டம்தான். இப்படியெல்லாம் எண்ணம்கொண்ட அவர் தனது பர்வதமலைப் பயணத்திற்கு என்னையும் அழைத்தார். இயற்கை நேசமும், மலைப் பயணமும் எனக்குப் பிடித்த விஷயம் என்றாலும், இவரிடம் பேசிக்கொண்டிருப்பது பிடிக்குமாதலால் இந்தப் பயணத்திற்கு ஒத்துக்கொண்டேன். திருச்சியிலிருந்து இரவு 12மணிக்குப் பேருந்தில் ஏறினால் 5.30க்குத் திருவண்ணாமலை. அங்கிருந்து சேலம் பேருந்து ஏறினால் அரைமணி நேரத்தில் செங்கம். அங்கு காலை டிபன் முடித்துவிட்டு மதியத்துக்கு பார்சல் பண்ணிக்கொண்டு தென்மாதிமங்கலம் கிராமத்திற்குப் பேருந்தில் சென்றால் அரைமணியில் போய்விடலாம். அங்கிருந்து மலைஏற நாலரைமணி நேரம்.அங்கு ஒரு மணிநேரம் தங்கி தரிசனம் செய்துவிட்டு மலையிறங்க இரண்டுமணிநேரம் ஆகும். அங்கிருந்து திருவண்ணாமலை வந்து கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, இரவு டிபனை அங்கேயே முடித்துவிட்டு பஸ் ஏறினால் அடுத்தநாள் விடியற்காலை திருச்சி வந்துவிடலாம். இது அவரது வழக்கமான பயணத்திட்டம். அதே திட்டத்தின்படியே பயணத்தைத் துவங்கினோம். செங்கம் வந்து இட்லிபூரி என டிபன் சாப்பிட்டுவிட்டு, கையில் இரண்டு செட் பூரி வாங்கிக்கொண்டு, கிராமத்துக்கு (தென்மாதிமங்கலம்) டவுன்பஸ்ஸில் சென்று இறங்கி, அங்கு எலுமிச்சம்பழங்கள் ஆளுக்கொரு டஜன் வாங்கினார் நண்பர். அங்கிருந்த ஒரு கடையில் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு,நடக்கத் தொடங்கினோம்.(ஆமாம். மலை முழுக்க செருப்பில்லாமல்தான் ஏறி இறங்கினோம்(அதுதான் நல்லது என்று நண்பர் விளக்கமும் கொடுத்தார்.))வழியில் ஒரு குளம் வந்தது. அங்கு குளித்து விட்டு(கலங்கலான தண்ணீர்.ஆனால் ஜில்லென்று இருந்தது..மனசும் ஜில்லென்று ஆகிவிட்டது)மாற்றுத்துணி அணிந்துகொண்டு நடக்கத்தொடங்கினால் சற்று நேரத்தில் பாரதிராஜா படங்களில் வருவதுபோன்ற காட்டுக்கோயில் ஒன்று தெரிந்தது. பதினைந்து இருபதடி உயரங்களில் ஏழு முனீஸ்வரர்கள் பெரிய உருவச்சிலையாக பெரிய கண்களால் மிரட்டலாகப் பார்த்தனர். பச்சையம்மன் கோவிலாம். நண்பர் பயபக்தியுடன் அங்கிருந்த சூலாயுதத்தில் மூன்று எலுமிச்சம்பழங்களைக் குத்தினார். சற்று தூரம் நடந்த பின் வீரபத்திரர் சுவாமி ஆலயம். எல்லைக் காவல் தெய்வமாம். இங்கிருந்து பர்வதமலை எல்லை ஆரம்பம்.போய் தரிசனம் செய்து நல்லபடியாகத் திரும்பவேண்டித்தான் இங்கு வேண்டுதல் செய்து கொள்ளுவது. இங்கிருந்து பார்த்தபோதுதான் தூரத்தில் தன் ஒருபக்க முழுத்தோற்றத்துடன் பர்வதமலை தெரிந்தது. உச்சியில் லிங்கத்தைப் பதித்து வைத்ததுபோன்ற தோற்றத்தில் விரிந்து பரந்த மலை.அந்த மலை உச்சிக்குத்தான் போகப்போகிறோமா எனத் திகைப்பாக இருந்தது. நண்பர் பல விஷயங்கள் பேசிக்கொண்டு வந்தார். அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலை, பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை என்று சொல்வழக்கு உண்டாம். தென்கயிலாயம் என்ற பெயரும் உண்டாம். காஞ்சி பெரியவர் ஒருமுறை இம்மலையைக்காண வந்தபோது இம்மலையைத் தரிசித்து மெய்சிலிர்த்து, சிவமே மலையாக இருக்கிறதென, மலையேறாமல்,அம்மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வணங்கிச் சென்றாராம். திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்போல் இங்கும் பௌர்ணமி கிரிவலம் பிரசித்தமானது. ஞான மார்க்கத்தில் செல்ல விரும்புபவர்கள் அமாவாசையன்று பர்வதமலை வருவார்கள் என்றும், லோகாதய வாழ்வில் சிறக்க பௌர்ணமியன்று வருவார்கள் என்றும், மொத்தத்தில் பௌர்ணமியன்றுதான் இம்மலையில் கூட்டம் அதிகமிருக்கும் என்றும் சொல்லிக்கொண்டு வந்தார். மலை ஏறஏற மனித சஞ்சாரமற்ற இயற்கையின் பேராட்சி ஆரம்பித்தது.சுற்றிலும் தெரிந்த மலைப் பிரதேசங்கள், நிலப் பரப்புகள், பரந்த வான்வெளி என மனம் பிரபஞ்ச வெளியில் லயிக்க ஆரம்பித்தது. இதுவரை வாழ்ந்த வெளியிலிருந்து ஒரு தனித்த வெளிக்கு வந்திருப்பதை மனம் உணர்ந்து,அடுத்து என்ன என்று ஆர்வமுடன் நோக்கத் தலைப்பட்டது. எது வந்தாலும் எதிர்கொள்ளும் எச்சரிக்கை மனமும் நானும் தயார் எனக் காத்திருந்தது. தொடர்ந்து நடந்து வந்ததாலும்,படிகளற்ற பாறைகளினூடாக,மக்கள் நடந்து நடந்து அமைத்த பாதைகளில் ஏறி வந்ததாலும் மூச்சு இரைத்தது. "இந்த மலைப்பிரதேச மூலிகைக் காற்று உடம்பினுள் சென்று வருவதால், உடம்போடு உள்பாகங்கள் சுத்திகரிக்கப்பட்டு வலுவடைகின்றன.நாள்பூராவும் மூச்சுவிட நேரமின்றி உழன்று கொண்டிருக்கும் நமக்கு இது மாதிரி மலையேற்றம்தான் சரியான உடற்பயிற்சி.ஆரோக்கியமானதும்கூட’’என்று நண்பர் சொல்லிக் கொண்டு வந்தார். ஓரிருவர் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். வெளிநாட்டுக்காரர்கள் சிலரையும் கண்டேன்.அவர்களைப் பார்த்தபோது மனதுக்கு ஏனோ ஆறுதலாக இருந்தது. மலையேறி இரண்டு மணிநேரம் ஆகியிருக்கலாம். மதியம் 12ஆகிவிட்டிருந்தது. மலையின் நடுப்பகுதிக்கு வந்திருந்தோம். அங்கிருந்து பார்த்தபோது மலை ‘நந்தி உட்கார்ந்திருப்பதுபோன்ற’ அமைப்பில் இருந்தது.‘‘கைலாயமிருக்கும் திசையை நோக்கி உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்’’என்றார் நண்பர். ஆமாம். வடதிசை நோக்கித் தான் இருந்தது. அப்போது மலையுச்சியில் பூஜை செய்வதுபோன்ற ஒலி கேட்டது. மத்தளம் முழங்க,சங்கொலி பரவ. . . ‘‘உச்சிக்கால பூஜை நடக்கிறது. இப்ப பாருங்க, கருடன் வரும்’’ என்று சொல்லிக்கொண்டே மேலே பார்த்தார். சொல்லி வைத்தாற்போல இரண்டு பருந்துகள் மலையைச் சுற்றி வந்தன. ‘‘என்ன இது ஆச்சரியமாக இருக்கிறதே, தினமும் வருமா?’’ என்று கேட்டேன். ‘‘வரும்’’என்றார். ‘‘திருவண்ணாமலைக்கு எத்தனையோ சித்தர்கள் வருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம். இந்தப் பர்வத மலையைச் சுற்றிலும் நிறைய சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம் கண்ணுக்குத் தெரியமாட்டார்கள். உயிர் கொண்டு உலவும் எந்தப் பிராணிகள் வடிவத்திலும் இருப்பார்கள். நீங்கள் அர்த்த ராத்திரியில் அமாவாசை இருட்டில்கூட இந்த மலைக்கு தனியாக வரலாம். மனித ரூபத்தில் சித்தர்களே உங்களை வழிநடத்திக் கூட்டிக் செல்வார்கள். எந்தப் பயமுமின்றி மலையுச்சி சென்று வழிபட்டு இறங்கிவரலாம். இருட்டில்கூட இயற்கையான வெளிச்சம் கிடைத்து வழிச்சிரமம் ஏதும் இருக்காது’’ என்று உறுதியான குரலில் தானே சென்று வந்ததைப்போலக் கூறினார். அதைக் குறிப்பிட்டுக் கேட்டபோது, ‘‘உண்மைதான். ஒரு தடவை இரவு தனியாக வந்திருக்கிறேன். என்னுடன் கூட யார் யாரோ வந்தார்கள். மலையுச்சி சென்று இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் பார்க்கும்போது அவர்கள் யாருமே கண்ணில் படவில்லை. வேறு யார் யாரோ இருந்தார்கள். இதைப்போன்ற அனுபவம் எத்தனையோ பேருக்கு வாய்த்திருப்பதைக் கேட்டிருக்கிறேன்’’ என்றார். அப்போது எங்களை ஒட்டியே ஒருவர் தன் பெண்குழந்தையைத் தூக்கித் தோளில்வைத்துக் கொண்டு தன் கனத்த சரீரத்தையும் தூக்கிக் கொண்டு மூசுமூசென்று மூச்சிரைக்க ஏறிவந்தார். கையில் ஒரு பெரிய பை.எலுமிச்சம் பழங்கள் நிறைய இருந்தன. அவரும் மாதாமாதம் வந்துவிடுவாராம். நண்பரை அவருக்குத் தெரிந்திருந்தது. அவர் இந்த மலையில் ஒரு காம்பில் ஏழுஇலைகளுள்ள வில்வ மரம் இருப்பதாகச் சொல்லி வழியில் அந்த மரத்தைக் காண்பித்தார். ஆமாம். ஒரு காம்பில் ஏழு இலைகள் அடுக்காக இருந்தன. மூன்று, ஐந்துதான் அதிகபட்சம் இருக்குமாம்.அந்தமரத்தின் கீழே சூடம் ஏற்றி வணங்கிவிட்டு கொப்பை வளைத்து ஒடித்துக் கொண்டு வந்தார். இலைகளை உருவி ஆளுக்குக்கொஞ்சம் பிரசாதம் போல் தந்தார். ‘‘இதை வீட்டுக்குக் கொண்டுபோய் எல்லோருக்கும் கொடுங்க. நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது.’’ மணி ஒன்றரை ஆகிவிட்டது. கால் வலித்தது. வெயில் கொளுத்தியது.காற்றும் வீசிக் கொண்டிருந்தது. வியர்வை பொங்கி வழிந்து கொண்டிருந்தது.மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. நிழல்தேடி ஆங்காங்கே நின்று நின்று ஏற ஆரம்பித்தோம். கண்ணுக்கெட்டிய தூரம் மலைகள் மலைகள்.நல்ல உயரம். இன்னும் ஒருமணி நேரமாகுமாம். வழியில் சின்னச் சின்னக் கடைகள் வைத்திருந்தார்கள். நீர்மோர், தேநீர்(அங்குக்கிடைக்கும் சுள்ளிகளை வைத்து நான்கு புறமும் சமமான கற்களை அடுப்பாகக் கொண்டு தீமூட்டி தயாரிப்பார்கள்), சுக்குக் காப்பி. . . (பான்பராக், பீடி, சிகரட், புகையிலைகூடக் கிடைத்தது) பனை நொங்குகூடக் கிடைத்தது. பௌர்ணமியன்றுதான் வியாபாரம் அதிகமிருக்குமாம். இவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது கடலாடி என்ற இடத்தின் வழியாக இந்த மலைக்கு மற்றுமொரு பாதை உண்டாம். செங்குத்துப் பாதையாம். அதன் வழியாகத்தான் வருவார்களாம்.
மலையின் உச்சிப்பகுதிக்கு வந்துவிட்டோம்.பெரும் கற்பாறைகள். ஏறுவதற்குப் பாதை இல்லை. கடப்பாரைக் கம்பிகளைச் செருகிச் செருகி படிபோல் அமைத்திருந்தார்கள்.அதைப்பிடித்துக் கொண்டே பையப்பைய ஏறவேண்டும். காற்று வேறு, கட்டியிருந்த வேட்டியைப் பிடுங்கியே தீருவதென்று பிடிவாதமாக இருந்தது. தோளில் தொங்கப்போட்டிருந்த பயணப்பையும் வேறு தொந்தரவாக இருந்தது.முதுகில் மாட்டிக்கொண்டேன்.
வேறு சிந்தனையற்றுப் போனது.உருப்படியாக ஏறிச் சென்று இறங்க வேண்டுமே என்ற ஆதார பயம் பிடித்துக் கொண்டது. நம்மிடம் எஞ்சியிருக்கும் அல்லது மறைந்திருக்கும் ஆதார சக்தியின் வலிமையை இப்போதுதான் உணர்ந்தேன். கடப்பாரைப்படிகளைக் கடந்தபிறகு ஒரு பெரிய பாறையைச் சுற்றி இரும்பால், வெல்டுமெஸ் பாதை போட்டிருந்தார்கள். நண்பர் "கீழே பார்க்காதீர்கள். பாதையை மட்டும் பார்த்துக் கொண்டு நகருங்கள்" என்று மறுபடியும் நினைவூட்டினார்.பாறையை ஒட்டியே மெதுவாக நடந்து சென்று கடந்து செல்ல வேண்டும்.பாறையின் எதிர்ப்பக்கம் பார்வையைத் திருப்பினால் அதலபாதாளத்தில் நிலப்பரப்பும் மலைத் தொடர்களும்.
மனசு சலனமற்று ஆனால் உத்வேகத்துடன் ‘சிவனை’ப் பற்றிக்கொண்டது. எப்படியாவது உயிருடன் திரும்ப யாசித்தது.
உச்சி ஏறியாயிற்று. என்ன ஆச்சரியம். அங்கு இரண்டு கோவில் மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன. சுற்றுப் பாதைகள் இருந்தன. அங்கிருந்து பார்த்தபோது வானம் ஒரு பெரிய கொட்டாங்கச்சியைக் கவிழ்த்து வைத்ததுபோல் அரைக்கோள வடிவமாக இருந்தது. சுற்றிலும் மலைத்தொடர்கள்....தூரத்தில் தெரிந்த லிங்க வடிவ மலையைச் சுட்டிக் காட்ட ‘அது திருவண்ணாமலை’என்று நண்பர் சொன்னார். அடுத்த மலைத்தொடரை ஜவ்வாது மலைத் தொடர் என்று சொன்னார். வெண்மேகங்களும் கருமேகங்களுமாக எங்களைத் தழுவிச் சென்றபோது ...சந்தேகமேயில்லை இது வானுலகம்தான்.
சற்று கீழே பார்த்தால் வயல் தோப்பு காடுகள் நடுநடுவே ஊர்கள்...நல்ல காற்று வந்தது. ஒருமண்டபத்தில் நுழைந்தால் கிராமத்துச் சிவன் கோவிலுக்கு வந்திருப்பதுபோன்ற சூழல் இருந்தது. சிறிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அம்மன் சிலை, முருகன், பிள்ளையார், நந்தி,வீரபத்திரர் முதலிய சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த உயரத்தில் எப்படி செங்கல், சுண்ணாம்புக்காரை, முட்டை, தண்ணீர் கொண்டுவந்து கட்டடம் எழுப்பி இருப்பார்கள்? கட்டடம் ‘நன்னன்‘ என்ற மன்னனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாம்.
ஒன்று புரிந்தது. . .தன்னலமற்று தன் வாழ்வையே பொதுப்பணிக்கு அர்ப்பணித்துக் காரியமாற்றும்போது எத்தகைய தடைகள் வந்தாலும் தகர்க்கும் மனோபலமும் வந்துவிடும். இதைத்தான் ‘முயன்றால் முடியாதது இல்லை’என்கிறார்கள். இத்தகு தன் சக்திக்கு மீறிய காரியங்கள் நடப்பது நம் ஆழ்மன ஆற்றலின் உந்துதலால்தான் என்பதும் புரிந்தது.கர்ப்பகிரகத்தில் சிவலிங்கத்தின் முன் உட்கார்ந்து நண்பரே மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய ஆரம்பித்தார். ( பல ஆண்டுகளுக்குமுன் சிவத்தலங்களில் தாங்களே வழிபாடு செய்துகொள்வதுதான் மக்கள் வழக்கமாம். பிராமணர் மற்றும் அதிகார வர்க்க அரசியல் உள்ளே புகுந்தபின்னே வழிபாட்டிலும் இன்று காணும் மாறுதல் வந்தது. இங்கும் அர்ச்சகர் ஒருவர் இருந்தார். வந்திருந்த ஒரு சிலரும் அர்ச்சனை செய்யச் சொல்ல அவரும் செய்தார். என் நண்பர், நாங்களே செய்துகொள்கிறோம் என்று கூறியபோது அவர் மறுக்கவில்லை.) வழிபாடு முடிந்தபின் அடுத்த மண்டபத்துக்கு வந்தால் அங்கு ஒரு ஆச்சரியம்.
அந்த மண்டபத்தில் ஒரு சித்தர் தங்கியிருக்கிறார். இந்த மலைக்கு வந்து இருபத்தைந்து வருடங்களுக்குமேல் ஆகிவிட்டதாம். இதுவரை கீழே இறங்கவேயில்லையாம். வாய்திறந்து பேசவும் மாட்டாராம். மௌனச் சித்தர். ஆனால் இங்கு வருபவர்களுக்கு எல்லா நாட்களிலும் மதியத்தில் உணவு தருகிறார். எங்களுக்கும் அன்று சாம்பார் சாதம் கிடைத்தது. சாதம் தனி ருசி கொண்டிருந்தது. அத்துடன் நாங்கள் கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தையும் பிரித்துச் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்தோம்.
ஒன்று நன்றாகப் புரிந்தது.
மலையடிவாரத்தில் இருக்கும்போது வழக்கமான உலக நடப்புச் சிந்தனைகள் இருந்தன. மலை ஏறஏற வழக்கமான பேச்சுகள்,சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, வெட்ட வெளிச் சிந்தனையும் பேச்சுகளும்,தொடர்ந்து மேலேற அந்தச் சிந்தனைகள்கூட அற்றுப்போய் வெளியில் கரைந்த மனநிலை வாய்க்கப்பெற்று, தன்னை மீறிய இறை சக்தியில் சரணடைந்த மனோநிலை வாய்க்கப்பெற்றதை உணர முடிந்தது. பாரதியாரின்‘ஞானரதம்’ கதை படித்தபோது இத்தகு மனநிலை வாய்த்தது நினைவுக்கு வந்தது.
அங்கு சுமார் முப்பது நாற்பதுபேர் வந்திருந்தார்கள். பெரும்பாலோர் இரவு தங்குவார்களாம்.
அது ரொம்ப விசேஷம் என்று நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார். எங்களுடன் வந்திருந்த அந்தப் பெரிய ‘ஆகிருதி’, தான் பையில் கொண்டுவந்திருந்த எலுமிச்சம்பழங்களைக் கோர்த்து மாலையாக்கிக் கொண்டிருந்தார்.சற்று தள்ளி நடந்தபோது ஓரிடத்தில் பெரிய்ய சூலாயுதம் ஒன்று பாறையில் நடப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் பாதங்கள் பாறையில் பதிந்திருந்தது.திருஅண்ணாமலையார் பாதம் என்றார்கள். நான்கு மணிக்கு இறங்க ஆரம்பித்தோம்.இரும்புப் படிக்கட்டுப்பாதை,கடப்பாரைப் பாதை என மறுபடி அதேபாதை, ஏறியதைவிட இறங்கும்போது சிரமமாக இருந்தது. கீழே அதல பாதாளம். ஆனால் இதுவரை யாருக்கும் இந்த மலையில் எந்தத் தீங்கும் நேர்ந்ததில்லையாம். கண் தெரியாத ஒருவர்கூட ஏறி இறங்கிச் சென்றிருக்கிறாராம். பக்தி இருந்தால் காரியம் சித்தியாகும் என்றார் நண்பர். உண்மைதான்.
இரண்டுமணிநேரத்தில் சரசரவென்று இறங்கி சமவெளி வந்து பச்சையம்மன் கோவிலை அடைந்தபோது அப்பாடா என்றிருந்தது.
கால்தான் சரியான வலி. ஊன்ற முடியவில்லை. பாதம் பாளம் பாளமாகப் பிளந்து எரிந்தது. அந்தக் கிராமம் வந்து செருப்பு அணியும்போதுதான் சற்று சுகமாக இருந்தது. பஸ் ஏறி திருவண்ணாமலை வந்து கோயில்முன் சூடம் ஏற்றி வணங்கிவிட்டு (விட்டால் நண்பர் கோயிலின் உள்ளே சென்று அண்ணாமலையானை வணங்கிவிட்டு வரத் தயாராக இருந்தார். நான்தான் கெஞ்சித் தடுத்தேன். அவ்வளவு கால் வலி.) ஓட்டலில் பூரி சப்பாத்தி என்று சாப்பிட்டபின் திருச்சி பஸ் ஏறி உட்கார்ந்ததுதான் தெரியும். அடுத்தநாள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்தபோது கண்டக்டர் எழுப்பிவிட்டார்.ஆட்டோ வைத்து வீடு வந்து சேர்ந்து அடுத்த மூன்று நாள் ஓய்வெடுத்தபின் உடம்பு சகஜநிலைக்கு வந்தது.
அன்றிலிருந்து எந்த உயரமான மலையைப் பார்த்தாலும் எனக்குத் தோன்றுவது இதுதான்: எந்த உயரமும் அடையக்கூடியதே!
thanks mr .pandiyan trichy
|