திங்கள், 3 மார்ச், 2014

பெருங்குழப்பம் -தேர்தலால்

இன்று காலையில் இருந்து ஒரே குழப்பமா இருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மிகவும் கஷ்டப்பட்டு , அலையோ அலையோன்னு அலைஞ்சி ஒரு வழியா என் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தேன் ..
தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தல் , சட்டசபை தேர்தல் , உட்கட்சித் தேர்தல் சாரி உள்ளாட்சித் தேர்தல் அனைத்திலும் என்னுடைய கடமையை செய்தேன் . உரிமையை உறுதி செய்தேன் .
ஆனால் சில பல மாதங்களாக வாரங்களாக வரும் தேர்தல் சமந்தமான செய்திகள் எனக்கு அடி வயிற்றில் புளி, மிளகாய்தூள் என ஒன்னு விடாம எல்லாத்தையும் கலக்கியன ..   அது என்னன்னா எப்ப பார் இந்த தேர்தல் ஆணையம் திருத்திய வாக்காளர் பட்டியல் னு அப்பப்ப ஒன்னு விடும் .
இந்த பட்டியல்ல எங்க நம்ம திருத்தி இருப்பாங்களோன்னு தான் எனக்கு குழப்பம் கொஞ்ச நாளா இருந்தது . நாட்டிலேயே கொஞ்சம் நேர்மையான துறை என்றால் அது தேர்தல் ஆணையம் தான் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு . ஆனா இதன் அடிமட்ட ஊழியர்களின் நேர்மை தான் ஊரறிந்த விசயமாச்சே ..
சரி இதுக்கு என்னதான் தீர்வு னு கொஞ்சம் இருந்த மூளையையும் கசக்கி பிழிந்து யோசிச்சப்போ தான் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளம் கண்ணில் பட்டது .
அந்த தளத்திற்கு போய் மாவட்டம், தொகுதி,வாக்குசாவடி பெயர் , என் பெயர் இதையெல்லாம் கொடுத்து தேடினேன் …  இதோ என் பெயர் இருக்கிறது .ஆஹா எனக்கு வெற்றி வெற்றி ..  பருவதேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற சந்தோசம் என்னை ஆக்கிரமித்தது ..
ஆனால் இந்த சந்தோசம் கொஞ்ச நேரத்தில் காலாவதி ஆகிவிட்டது. என் பெயர் நேரே எதிர் வீட்டின் முகவரியும் கதவும் என்னும் இருந்தது. அதே மாதிரி அந்த வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணின் பெயர் எங்கள் வீட்டு முகவரியில் இருந்தது . நான் அப்படியே ஆடிப்போய்ட்டேன்.
எங்களுக்கும் அவங்களுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான் . கொஞ்சம் கூட ஆவாது இதுல இது வேறையானு நொந்துகிட்டேன் . எனக்கு இப்போதைக்கு எந்த பிரச்சினையும் இல்ல . ஆனா ஓட்டு போடும் போது அங்கு அமர்ந்திருக்கும் எங்க ஏரியா பூத் ஏஜண்டுகள் இந்த விசயத்தை ஊத்தி பெருசாக்கிட்டா மறுபடியும் ஒரு பஞ்சாயத்து நடக்குமேன்னுதான் ஒரே கவலையா இருக்கு . இந்த லட்சணத்துல அந்த பொண்ணு எனக்கு ஒரு வழில முறையா வருது . எதுனா 7 1 /2 கூட்டாம இருந்தா சரி (இந்த பெயர் மாற்றத்துல என்னோட உள்  குத்து வெளி குத்து  எதுவும்  இல்லை நாளைக்கு பஞ்சாயத்துல நிருபிக்க ஆதாரம் தேடிக்கொண்டு இருக்கிறேன் )
இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் , அவர்களுக்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கும், அடிக்கடி வீட்டுக்கு வந்து நாங்க வீட்ல தான் இருக்கோமான்னு சோதனை செய்து லிஸ்ட் எடுக்கும் ஆசிரிய நல் உள்ளங்களுக்கும் , கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் அவருடைய  உதவியாளர்களுக்கு பணிவன்புடன் கேட்டுகொள்வது என்னவென்றால் தயவுசெய்து கொஞ்சம் நிதானமா வேலை செய்யுங்க .படம்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

கலவரத்தில் இறந்தவரின் மனைவியை வாழ்க்கைத் துணையாக்கிய நல்ல உள்ளம்- பரமக்குடியில் நடந்த நெகிழ்ச்சித் திருமணம்

சில நேரங்களில் துயரமான சம்பவங்கள்கூட இன்னொரு நல்ல தொடக்கத்துக்கு தடம் போட்டுக் கொடுத்துவிடும். பரமக்குடி கலவரத்தில் தனது காதல் கணவனை போலீஸ் துப்பாக்கிக் குண்டுக்கு காவுகொடுத்த காயத்ரிக்கும் அப்படியொரு தொடக்கம் கிடைத்திருக்கிறது.
பரமக்குடியில் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் நடந்த கலவரத்தின்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாயினர். அதில் ஒருவர் ஜெயபால்.
பரமக்குடியை அடுத்த மீஞ்சூரைச் சேர்ந்தவர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காயத்ரியை காதலித்து கலப்பு மணம் செய்திருந்தார். ஜெயபால் இறந்தபோது காயத்ரி நிறைமாத கர்ப்பிணி. அடுத்த 18-வது நாள் ஆண் குழந்தைக்கு தாயானார்.
அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் நின்றவருக்கு பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் கிளார்க் வேலை கொடுத்து ஆறுதல் சொன்னது அரசு.
இந்த நிலையில்தான் காயத்ரியை மறுமணம் செய்துகொள்ள முன்வந்திருக்கிறார் இமானுவேல் சேகரன் பேரவையின் பரமக்குடி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன். ‘‘ஆண்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், ஒரு பெண் கண வனை இழந்தாலோ, பிரிந்து வாழ்ந்தாலோ இன்னொரு திருமணம் செய்துகொள்ள இந்த ஆணாதிக்க சமுதாயம் அவ்வளவு எளிதில் விடுவதில்லை. இந்த நிலையை மாற்றவேண்டும். கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் சிந்தனை.
இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது தோழர் ஜெயபால் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார். அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. அந்த பாதிப்புதான் அவரது துணைவியாருக்கு மறுவாழ்வு கொடுக்கும்படி என்னை உந்தியது’’ என்கிறார் ராஜேந்திரன்.
ராஜேந்திரனின் விருப்பத்தை காயத்ரியிடம் எடுத்துச் சொல்லி சம்மதம் பெற்ற இமானுவேல் சேகரன் பேரவையினர் இருவருக்கும் கடந்த 16-ம் தேதி பரமக்குடியில் திருமணம் செய்துவைத்துள்ளனர்.
புது வாழ்வு பெற்ற காயத்ரி, ஜெயபாலின் நினைவுகளைச் சுமந்தபடி கண்ணீருடன் பேசினார்.. ‘‘அவங்க இறந்த பின்னாடி, என் பிள்ளைதான் எல்லாம்னு இருந்தேன். அதனால, இவங்க விருப்பத்தைச் சொன்னப்ப முதல்ல நான் சம்மதிக்கல. அப்புறம் சொந்தபந்தங்க எல்லாரும், ‘நல்ல பையனா இருக்காப்ல.. எத்தனை நாள்தான் தனியா இருப்ப.. உனக்கும் ஒரு துணை வேண்டாமா?’ன்னாங்க. யோசிச்சுப் பாத்தேன். திருமணத்துக்கு சம்மதிச்சேன்.’’ சொல்லிவிட்டு மீண்டும் கண்கலங்கினார் காயத்ரி. இது ஆறுதலுக்கு ஒரு நிழல் கிடைத்துவிட்டதை அடையாளம் காட்டும் ஆனந்தக் கண்ணீர். 


குள.சண்முகசுந்தரம்

தமிழ் கம்ப்யூட்டர்: யூடுப் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இரண்டு தளங்கள்

தமிழ் கம்ப்யூட்டர்: யூடுப் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இரண்டு தளங்கள்: யூடுப் தளத்தின் உதவியுடன் அனைத்து விதமான வீடியோக்களையும் காண முடியும். இந்த தளத்தின் உரிமை தற்போது கூகுள் வசம் உள்ளது. கூகுள் கணக்கு வைத்த...