செவ்வாய், 12 மார்ச், 2013

தென்பெண்ணையிலும் கைவைத்த கர்நாடகா-விவசாயிகள் அதிர்ச்சி

தெண்பெண்ணை ஆற்றில், மின்மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி, மெகா குழாய் மூலம், 130 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை, கர்நாடகா அரசு துவங்கி உள்ளது. இதனால், தென்பெண்ணையாற்றை நம்பியுள்ள, ஐந்து மாவட்ட மக்கள் பாதிப்படையும் நிலையுள்ளது.

கர்நாடகா மாநிலம், "நந்தி ஹில்ஸ்' மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலம் ஒசகோட்டா, முகுலப்பள்ளி வழியே, தமிழக எல்லையில் சிங்கசாதனப் பள்ளி என்னும் இடத்தில் நுழைந்து, பெலத்தூர், பாகலூர் வழியாக ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில், தேக்கி வைக்கப்படுகிறது.இந்த அணையின் நீர் மட்டத்தை பொறுத்து, தென்பெண்ணை ஆற்றில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அங்கிருந்து, பாரூர் ஏரி வழியாக, திருவண்ணாமலை சாத்தனூர் அணைக்கு சென்று, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வழியாக கடலூர் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. இந்த ஆறு தமிழகத்தில், 360 கி.மீ., பாய்ந்தோடுகிறது. இந்த ஆற்றை நம்பி, ஓசூர் கெலவரப்பள்ளி அணை மூலம், 8,000 ஏக்கர், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை மூலம், 9, 200 ஏக்கர், பாரூர் ஏரி மூலம், 2,500 ஏக்கர், சாத்தனூர் அணை மூலம், 23 ஆயிரம் ஏக்கர் உள்ளிட்ட, 43 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

காவிரி, பாலாற்றை போல், கடந்த காலங்களில் தென்பெண்ணையாற்றிலும், கர்நாடகா அரசு, அணை கட்ட ஆய்வு மேற்கொண்டது. இதற்கு, தமிழக அரசும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தால், அணை கட்டும் முடிவை அம்மாநில அரசு கைவிட்டது.ஓசூர் அடுத்த தமிழக எல்லைக்கு முன், கர்நாடகா எல்லையான முகளூர் தத்தனூரில், தென்பெண்ணை ஆற்றில் குடிநீர் குழாய் மூலம், மின் மோட்டார்களை பயன்படுத்தி, அம்மாநிலத்தில் உள்ள, 130 ஏரிகளை நிரப்பும் புதிய குடிநீர் திட்டத்தை ஓசையில்லாமல், கர்நாடகா அரசு துவங்கியுள்ளது.

முதல் கட்டமாக இந்த திட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில், 24 மணி நேரமும் தண்ணீர் உறிஞ்சி, முகளூரில் தரைமட்ட கீழ் தொட்டியில் தண்ணீரை தேக்கி, அங்கிருந்து மண்ணுக்கு அடியில் குழாய் பதித்து, 11 கி.மீ., தொலைவில் உள்ள, 150 ஏக்கர் பரப்பில் உள்ள லக்கூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.படிப்படியாக, இந்த திட்டம், 129 ஏரிகளுக்கு விரிவுப்படுத்தி தண்ணீர் நிரப்ப கர்நாடகா அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "இரு நாட்களுக்கு முன் அந்த திட்டத்தை துவங்கியதாக கேள்விப்பட்டோம். அந்த திட்டத்தை அரசு செய்யவில்லை. எம்.எல்.ஏ., கிருஷ்ணாசெட்டிதான் சொந்தமாக செய்துள்ளார். அதனால், தென்பெண்ணை ஆற்றில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விரைவில் அந்த திட்டத்தால் எந்தளவு பாதிப்பு என ஆய்வு செய்யப்படும்' என்றனர்.


தென்பெண்ணையாறு மூலம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, மழையில்லாத காலத்தில், சராசரியாக, 300 கன அடியும்; மழைக் காலத்தில், 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் கன அடியும் தண்ணீர் வரத்து இருக்கும்.கர்நாடகா தென்பெண்ணை ஆற்றில் நீர் உறிஞ்சப்படுவதால், நேற்று, 120 கன அடியாக நீர் வரத்து குறைந்ததால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அணை கட்டாமல் தொடர்ந்து இந்த நீர் உறிஞ்சும் திட்டத்தை, கர்நாடகா அரசு விரிவுப்படுத்தினால், தமிழகத்துக்கு வரும் தென்பெண்ணை ஆறு, வறண்டு விடும் எனவும், கர்நாடகா அரசு ஆதரவின்றி, எம்.எல்.ஏ. கிருஷ்ணாசெட்டி அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என, தமிழக விவசாயிகள் தெரிவித்தனர்.



நேற்று முன்தினம் ஓசூர் அருகே கர்நாடகா எல்லையான முகளூரில் நடந்த இந்த புதிய குடிநீர் திட்டத்தை மாலூர் பா. ஜ.,- எம்.எல்.ஏ., கிருஷ்ணா செட்டி திறந்து வைத்து பேசுகையில், ""கர்நாடகா அரசு ஒத்துழைக்காவிட்டாலும், நான் என்னுடைய சொந்த செலவில் இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவேன். இதற்காக நான் எதையும் சந்திக்க தயராக உள்ளேன்,'' என்றார்.இந்த நிகழ்ச்சியில், அம்மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நன்றி தினமலர்... மின்இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக