புதன், 6 அக்டோபர், 2010

கிரிவலம் ஒரு பார்வை


 இதற்கு பெயர் போன ஊர் திருவண்ணாமலை. இங்கு ஒவ்வொறு மாதமும் பௌர்ணமி அன்று பல்லாயிடரக்கணக்கான மக்கள் திருஅண்ணாமலையை(18 கிலோ மீட்டர்) சுற்றி வருகிறார்கள்.
இப்படி சுற்றி வரும்போது "சிவ சிவ" என்று சொல்லிகொண்டே சுற்றி வர வேண்டும் என மலை சுற்றும் பாதையில் எழுதி வைத்து இருக்கிறார்கள். "சிவ சிவ" என சொல்லிக்கொண்டே சுற்றினால் புண்ணியம் கிடைக்கும் எனவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மலையை சுற்றுவதால் மலையில் இருக்கும் மூலிகைச் செடிகளின் தன்மையால் ஒரு வித புத்துணர்ச்சி கிடைப்பதாக சொல்கிறார்கள்.
மாதா மாதம் பௌர்ணமி அன்று திருஅண்ணாமலையை சுற்றும் முறை கடந்த பத்து பதினைந்து வருடங்களாகத்தான் கடைபிடிக்கப்பட்டு வருவதாக மலை சுற்றும் பாதையில் உள்ள ஒரு வயதானவர் சொன்னார். அவரை பார்ப்பதற்கு சித்தர் போன்று நீண்ட முடிகளுடன் காவி வேட்டி, ருத்ராட்சை சகிதம் காட்சி தருகிறார். ஆனால் அவர் உண்மையிலேயே முனிவரா என தெரியவில்லை. இதற்கு முன் தீபம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் மட்டுமே சுற்றி வருவார்களாம்.
பௌர்ணமி அன்று மட்டும் இல்லாமல் சிலர்அமாவாசை அன்றும் சுற்றி வருகிறார்கள். இப்படி சுற்றுவது வெகு சிலரே. மேலும் அமாவாசை அன்று திருஅண்ணாமலையை எதிர்மறையாக சுற்றி வரும்போது திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த முனிவர்களீன் ஆவி தெரியும் என்றும், ஆனால் அந்த ஆவியை பார்க்க நம் மனம் திடகாத்திரமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இது வெறும் செவி வழி செய்தியாகவே இருக்கிறது. இன்று வரை யாரும் இதைநிரூபிக்கவில்லை.
எப்போதாவது ஒரு சிலர் மலையில் அதுவும் பகலில் கருப்பாக நீண்ட முடியுடன் ஒரு உருவம் ஆகாயத்துக்கு பறந்து சென்றதாகக் கூறுவர்.
பௌர்ணமி,அமாவாசை தினங்கள் மட்டும் இன்றீ சாதாரண நாட்களீலும் சிலர் சுற்றீ வருவார்கள்.திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு சென்றால் நாம் இதை நேராக பார்க்கலாம். இதில்லாமல் சில வெளிநாட்டு பக்தர்களும், சில உள்ளூர் வாசிகளும் தினமும் மலையை சுற்றி வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து வந்து பல வருடங்களாக இங்கு தங்கி உள்ள வெளி நாட்டினர் சிலர் தினமும் மலையை சுற்றி கிரிவலம் வரும் போது கிரிவலப் பாதையில் இருக்கும் குப்பைகளை அப்புறப் படுத்துகிறார்கள். இவர்களுக்கு இருக்கும் அக்கறை கூட கிரிவல பாதையில் வீடு கட்டித் தங்கி உள்ள உள்ளூர் வாசிகளுக்கு இல்லாமல் போனது வெட்கப்படவேண்டிய விசயம்.
கார்த்திகை மாதத்தில்தான் கிரிவலம் வெகு சிறப்பாக இருக்கும். அன்று ஒரு நாள் மட்டுமே லட்சக்கணக்கானோர் கிரிவலம் வருவார்கள். அடிமுடி காணாத அண்ணாமலையில் அன்று சாலையின் தார் தெரியாத அளவுக்கு மக்கள் கூட்டம் இருக்கும்.
தீபத் திரு நாளான அன்று மலையின் உட்சியில் தீபம் ஏற்றப்படும். இந்த சமயத்தில் மலையைச் சுற்றி வர உடம்பில் புது தெம்பு வேண்டும். கிரிவலப் பாதையில் மொத்தம் 8 லிங்கங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொறு ராசிக்கு உகந்தவை. 8 லிங்கங்களும் அவற்றின் ராசிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திரலிங்கம் -         ரிஷபம்,துலாம்
அக்னிலிங்கம்  -         சிம்மம்
எமலிங்கம்         -         விருச்சிகம்
நிருதிலிங்கம்  -         மேஷம்
வருணலிங்கம் -         மகரம்,கும்பம்
வாயுலிங்கம்   -         கடகம்
குபேரலிங்கம்  -             தனுசு, மீனம்
ஈசான்யலிங்கம்     -         மிதுனம், கன்னி
12 ராசிக்காரர்களும் அவர்களுக்கு உகந்த லிங்கங்களை காலால் நடந்து சென்று தரிசிக்கும் போது சகல நன்மைகலும் கிடைக்கும். இதுவும் அங்கு பல இடங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சியில் மேற்கொள்ளப்படும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் கிரிவலத்தின் ஆரம்ப நிலையில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை மிகவும் மோசமாகி உள்ளது. இது மலை சுற்றும் பக்தர்களுக்கு மிகவும் இடைஞ்சலைத் தருகிறது. மேலும் கிரிவலப் பாதையின் முதல் 4 கிலோ மீட்டரும், கடைசி 2 கிலோமீட்டரும் நகரத்தில் வருகிறது. இதனால் கிரிவல்ம் செல்பவர்கள் வாகன நெரிசல்களால் அவதிப்பட நேரிடுகிறது.
கிரிவலப் பாதை முழுவதும் ஏராளமானோர் அன்னதானம் உள்ளிட்ட பல தானங்களை வழங்குகிறார்கள். பெரும்பாலும் இவை நேர்த்திக் கடனாக செய்யப்படுகிறது. ஒரு சிலரே இதை சேவையாக கருதி ஒவ்வொறு மாதமும் தவராமல் செய்து வருகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க சிலரை பரிதாபமும், பலரை முகம் சுளிக்கவும் செய்யும் விஷயம், இங்கு கிரிவலப் பாதை முழுவதும் நிறைந்து காணப்படும் பிட்சைக்காரர்கள். சிலர் காவி வேட்டி சகிதம் காணப்படிகிறார்கள். இந்த பிட்சைகாரர்களுக்கு பணம் ஏதாவது குடுத்தால் நாம் தப்பித்தோம், இல்லை எனில் அவர்கள் நம்மை புற முதுகில் திட்டுவார்கள். இதை சர்வசாதரணமாக கிரிவலப் பாதையில் காணலாம்.
கிரிவலத்தின் போது ஒவ்வொறு கிலோ மீட்டர் முடிவிலும் கடந்து வந்த தூரம், இனி செல்ல வேண்டிய தூரம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொறு லிங்கம் இருக்கும் இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் காலில் செருப்பு அணிந்து கொண்டும், கார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களிலும் மலையைச் சுற்றி வருகிறார்கள். வழி நெடுகிலும் ஏராளமாக சிமெண்டால் ஆன இருக்கைகள் பக்தர்கள் உட்காருவதற்கு போடப்பட்டுள்ளது.
அதேபோல குடிநீருக்கு தண்ணீர் குழாய்களும், இரவிலும் கிரிவலம் வருவதால் மின்சார விளக்குகளும் வழி நெடுகிலிம் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சில தண்ணீர் குழாய்களில் தண்ணீர் வராமலும், குழாய் உடைந்தும் காணப்படுகிறது.
வெறுங்காலால் கால்கடுக்க நடந்து வரும் பக்தர்களின் வசதிக்காக, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபாதையில் ' டைல்ஸ்' பதித்துள்ளனர். பெரும்பாலும் நடைபாதைகளை தற்காலிக கடைகாரர்கள் ஆக்கிரமித்து உள்ளதால் பக்தர்கள் நடைபாதையை உபயோகிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
கிரிவலப் பாதையில் 8 லிங்கங்களைத் தவிர்த்து, ஏராளமான தனியார் கோவில்கள் உள்ளன. மேலும் பல கோவில்கள் இப்போது கட்டப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் இவை பணத்துக்காக தான் கட்டப்படிகின்றன. இதை நீங்கள் கிரிவலம் வரும்போது நேரிடையாக தெரிந்து கொள்ளலாம்.
கிரிவலப் பாதையில் இருக்கும் குபேரலிங்கம் கோவிலில் திருப்பதியில் உள்ளது போன்று காசு எறிகிறார்கள். காரணம் தெரியவில்லை. தெரிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை.
இதை தாண்டியதும் வருவது "இடுக்கு பிள்ளையார் கோவில்". எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு இங்கு உண்டு. ஆம் இங்கு பெயர் தான் இடுக்கு பிள்ளையார், ஆனால் இடுக்கு மட்டுமே உண்டு, பிள்ளையார் இல்லை.
இது ஒரு சிறிய கோவில். இந்த கோவிலுக்குச் செல்ல ஒரே ஒரு சிறிய வழி. மிகவும் குறுகலாக இருக்கும். இந்த வழியில் இரண்டு பாதங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த கோவிலுக்கு பின் புறமாக சென்று ஒருக்களித்த படி, திக்கித் திமிறி, உடலை லாவகமாக அசைத்து கொஞ்சம் கொஞ்சமாக, எதிரில் இருக்கும் நந்தியை பார்த்தபடி வெளியே வரவேண்டும். இது மிகவும் இக்கட்டாக இருப்பதால், இதில் எல்லோராலும் ஈசியாக வர முடியாது. ஆனாலும் எல்லோராலும் உள்ளே புகுந்து வெளியே வரமுடியும் என்பது இதன் சிறப்பு.
உடல் பருமன் கொண்டவர்கள் கொஞ்சம் கஷ்டப்படவேண்டி இருக்கும். இப்படி கஷ்டப்பட்டு இடுக்கு பிள்ளையார் கோவில் உள்ளே புகுந்து வெளியே வரும்போது, 10 கிலோ மீட்டர் நடந்து வந்ததால் ஏற்பட்ட அலுப்பு, கால் வலி, உடல் வலி எல்லாம் நீங்கி, ஒரு புத்துணர்ச்சி நம்  உடம்புக்கு கிடைக்கும்.
இது சத்தியமான உண்மை. நானும் இதை உணர்ந்து இருக்கிரேன். இடுக்கு பிள்ளையாரை தரிசித்தவர்கள் ஈசான்ய லிங்கத்தை தரிசித்த பின்பும் எந்த சோர்வும் இல்லாமல் பெரியக் கோவிலுக்குச் செல்ல முடியும். ஆனால் இடுக்கு பிள்ளையார் கோயிலில் உள்ளே நுழைந்து வராமல், ஈசான்ய லிங்கத்தை தரிசித்து விட்டு அல்லது தரிசிக்காமல் ஈசான்ய லிங்கத்தை தாண்டி நடந்து செல்லும் போது கடுமையான உடல் வலி ஏர்படுகிறது. இதை நான் பல முறை அனுபவித்து இருக்கிரேன்.
இதற்கு காரணமாக ஈசான்யலிங்கம் சுடுகாட்டில் அமைந்து இருப்பதை கூருகின்றனர். ஆனாலும் இதற்கு சரியான காரணத்தை இது வரை யாராலும் கூர முடியவில்லை. இப்படி எண்ணற்ற அதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த கிரிவலப் பாதையை நீங்களும் வலம் வந்து உங்களுடைய அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஓம் நம சிவாய

எழுத்து-
எண்ணம்-
உருவாக்கம்-
---கார்த்திகேயன்.

எந்திரன் ர‌ஜினியின் மாஸை மட்டும் தவிர்த்தால் - வெறும் ஆட்டுக்கல்.

ரசிகர்களாலும், மீடியாக்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் எந்திரன். ர‌ஜினி, ஷங்கர், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் போன்ற பிரமாண்ட பெயர்களால் எந்திரன் மீதான எதிர்பார்ப்பு வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்ததை சாதாரண ரசிகர்களும் அறிவர். என்டிடிவி உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் எந்திரனை மகத்தான திரைப்படம் என்று வர்ணித்து வரும் நிலையில் இப்படத்தை விமர்சனம் செய்வதென்பது சவாலான விஷயமாகும்.

WD
முதலில் எந்திரன் கதையை பார்ப்போம். வசீகரன் என்ற விஞ்ஞானி பத்து வருடங்கள் உழைத்து மனிதன் போலவே இருக்கும் ரோபோ ஒன்றை உருவாக்குகிறார். இந்த ரோபோவை ஒத்துக்கொள்ள மறுக்கிறார் வசீகரனுக்கு குருவாக இருக்கும் நபர். தனது சிஷ்யன் தன்னால் முடியாததை சாதித்துவிட்டான் என்ற கோபமே இதற்கு முக்கிய காரணம். இரண்டாவது இந்த ரோபோவுக்கு மனித உணர்வுகள் என்னவென்று தெ‌ரியாது. சொன்னதை செய்யும். மனித உணர்வுகள் இதற்கு பொருட்டல்ல. 

இந்த ஒரு பலவீனத்தை வைத்து வசீகரனின் மகத்தான கண்டுபிடிப்பை நிராக‌ரிக்கிறார் குரு. இதனால் தனது கண்டுபிடிப்பான மனித ரோபோவை இந்திய ராணுவத்தில் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், உயி‌ரிழப்பை குறைக்க வேண்டும் என்ற வசீகரனின் கனவு நிராக‌ரிக்கப்படுகிறது.

இதனால் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட எந்திரத்துக்கு மனித உணர்வுகள் கிடைக்கச் செய்கிறார் வசீகரன். மனித உணர்வு கிடைக்கப் பெற்ற எந்திர மனிதன் தன்னை உருவாக்கிய வசீகரனின் காதலியையே காதலிக்கிறது. இதனை விரும்பாத வசீகரன் எந்திரனை கண்டம் துண்டமாக வெட்டி குப்பையில் எறிகிறார். இதனை அறிந்த வசீகரனின் குரு மனித எந்திரனுக்கு உதவி செய்து அவனை மீண்டும் முழுமையான எந்திரனாக்குவதுடன் அவனுக்குள் அழிக்கும் சக்தியையும் புகுத்துகிறார்.

அழிக்கும் சக்தி பெற்ற எந்திரன் வசீகரனின் காதலியை கவர்ந்து செல்ல, வசீகரன் அதன் கொட்டத்தை அடக்கி காதலியை எப்படி மீட்டுக் கொள்கிறார் என்பதே எந்திரன் படத்தின் கதை.

படத்தின் கதையை படிக்கும் போதே எந்திரனை எப்படி உருவாக்கியிருப்பார்கள், அதனை எப்படி தத்ரூபமாக உலவவிட்டிருப்பார்கள் என்று பார்க்க ஆவலாக இருக்கும். இந்த வேலையை ஹாலிவுட்டின் பிரபல நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு மட்டும் ஏறக்குறைய அறுபது கோடிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஹீரோ ர‌ஜினியை தத்ரூபமாக எந்திரனாக காட்டுவது, கிளைமாக்ஸில் எந்திரன் ர‌ஜினி தனது ஒவ்வொரு பார்ட்ஸையும் தனித்தனியாக கழற்றுவது போன்ற காட்சிகளை அச்சு அசலாக காட்டியிருக்கிறார்கள். 

வசீகரன் (ர‌ஜினி) பத்து வருடங்கள் இந்த மனித ரோபோவை உருவாக்க கஷ்டப்பட்டதாக சொல்கிறார்கள். இதற்கு காட்சி எதுவும் வைக்கவில்லை. வசீகரனே இந்த‌் தகவலை சொல்கிறார். பத்து வருஷம் கஷ்டப்பட்டதை காட்ட இயக்குனர் தனது கற்பனையிலிருந்து செலவழித்தது வசீகரனின் ஒட்டுத் தாடியும் நீண்ட தலைமுடியும் மட்டுமே. இந்த பத்து வருட இடைவெளியில் இவர் ஐஸ்வர்யா ராயையும் காதலிக்கிறார். காதலிக்கு நேரம் செலவழிக்காததை காட்ட ஒரு காட்சியும் அதனைத் தொடர்ந்து ஒரு டூயட்டும் படத்தில் உள்ளது. ஒட்டுமொத்த படத்தைப் பார்க்கும் போது காதலிக்கு நேரம் செலவழிக்காததை காட்ட அல்ல, டூயட்டுக்காகவே இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
மனித எந்திரன் (இதுவும் ர‌ஜினியே) செய்யும் சாதனைகளும், அசட்டுத்தனங்களும் படத்தின் முன்பகுதியில் பிரதானமாக வருகிறது. டிவியை போடு என்று சொன்னால் டிவியை ஆன் செய்யாமல் கீழே போடுகிறது. தீயில் சிக்கியவர்களை காப்பாற்று என்ற சொன்னால் இளம் பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது நிர்வாணமாக காப்பாற்றி எல்லோருக்கும் முன்பாக கொண்டு வந்து நிறுத்துகிறது. எந்திரத்துக்கு மனித உணர்வுகள் இல்லை என்பதை காட்டும் இந்தக் காட்சிகள் படத்தில் அத்தனை உறுத்தாமல் பொருந்திப் போவதை பாராட்டியே ஆக வேண்டும்.

WD
வசீகரன் எந்திரனுக்கு மனித உணர்வுகளை ஒரு கணிதம் போல் எழுதி காண்பிக்கும் காட்சிக்கு இரண்டு முகங்கள் உள்ளது. நகைச்சுவை உணர்வு உள்ளவர் அதனை அந்த கோணத்தில் எடுத்துக் கொள்ளலாம், சீ‌ரியஸான ஒரு மனிதர் அதனை சீ‌ரியஸாக எடுத்துக் கொள்ளலாம். ஆக, இப்போது எந்திரனுக்கு மனித உணர்வுகள் வந்துவிட்டது. அது வசீகரனின் காதலியை காதலிக்க‌் துவங்கிவிட்டது. கல்யாணத்தன்று அது காதலியை கடத்தியும்விட்டது. இனி கிளைமாக்ஸ். 

படத்தின் முக்கால்வாசி பட்ஜெட் இந்த கிளைமாக்ஸுக்கு செலவிடப்பட்டிருக்கும் என்பதை படத்தின் பின்னணி இசையை கேட்கும் ஒரு குருடன்கூட உணர்ந்து கொள்வான். எந்திரனின் கொட்டத்தை அடக்க வசீகரன் பல விஷயங்கள் சொல்கிறார். மியூட் செய்யப்பட்ட இந்தக் காட்சியை பார்க்கும் போது ஒருவர் பெ‌ரிதாக எதிர்பார்ப்பது தவறல்ல. ஆனால் வசீகரன் சிட்டியின் மின்சார சப்ளையை கட் செய்ய‌சொல்வதும், எந்திரனைப் போலவே இருக்கும் நூற்றுக் கணக்கான எந்திரன்கள் கார் பேட்ட‌ரியிலிருந்து ‌‌ரீசார்‌‌் செய்துக் கொள்வதும் குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும் சமாச்சாரங்கள். இறுதியில் எந்திரன்கள் பந்தாகவும், பாம்பாகவும், ராட்சஸ மனிதனாகவும் மாறி அட்டகாசம் செய்யும் காட்சிகள் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட பல படங்களின் சாயல்.

ர‌ஜினி என்ற மாஸ் பிம்பம் இல்லாமலிருந்தால் எந்திரனை பற்றி நினைப்பதே ஒரு தயா‌ரிப்பாளருக்கு வாழ்நாள் துர்சொப்பனமாக இருந்திருக்கும். இதிலிருந்தே படத்தின் திரைக்கதை தரத்தை ஒருவர் தெ‌ரிந்து கொள்ளலாம். ரஹ்மானின் இசையும், பின்னணி இசையும் பாஸ் மார்க்கை‌் தாண்டவில்லை. இதனை பு‌ரிந்து கொள்ள முடியாதவர்களும், பு‌ரிந்து கொள்ள மறுப்பவர்களும் அவ‌ரின் ஸ்லம்டாக் மில்லியன‌ரின் பின்னணி இசையை மீண்டும் ஒருமுறை கேட்கவும் (கவனிக்க, பாடல்களை அல்ல, பின்னணி இசையை). 

மிகப் பெ‌ரிய சாதனை செய்யும் விஞ்ஞானியின் இரு அசட்டு அசிஸ்டெண்டுகள் (சந்தானம், கருணாஸ்), நம்ம கூட்டத்துல ஒரு கறுப்பு ஆடு என்று எந்திரன் கர்‌ஜிப்பது (அப்படியே அசோகன் பட எஃபெக்ட்), வசீகரனின் குருவுக்கு சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்பு.... திரைக்கதையின் அத்தனை நூலிழையும் நொந்து நூலானவை. 

ர‌ஜினியின் மாஸை மட்டும் தவிர்த்தால் எந்திரன் - வெறும் ஆட்டுக்கல்.


நன்றி : ஒரு தமிழ் இணைய தளம்